பெண்களை  சலிப்படைய செய்யும் அந்த கேள்விகள்

இன்றைய இளம்பெண்களை வருத்தமடைய செய்யும் வகையில் கேட்கப்படும் கேள்விகள் இவைதான்.

இக்கால பெண்கள் எவ்வளவு முன்னேற்றகரமான வெற்றியாளர்களாக மிளிர்கின்ற போதிலும் அவர்களை மனோவியல் ரீதியாக சில காரணிகள் முடக்கிட செய்து விடுகின்றன. பலதரப்பட்ட பெண் ஆளுமைகள் இந்த உலகில் முன்னணியில் திகழ்ந்தாலும் சில அடிப்படை விடயங்களை காரணிகளாக காட்டி அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதில் ஒரு சிலர் மும்முரமாகவே இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இவ்வாறு இக்கால இளம் பெண்களை சலிப்படையவும், கோபப்படுத்தவும், கலைப்படையவும் செய்யும் விதமாகவும், மனோரீதியில் அவர்களை தாக்கும் விதமாகவும் ஒரு சிலர் கேட்கும் கேள்விகளால் மிகவும் பாதிப்பினை பெண்கள் அடைந்துவிடுகின்றனர். உடல் ரீதியாக அன்றி மன ரீதியாகவே பெண்கள் அதிகபட்சமாக தாக்கப்படுவதும், அதனால் சோர்வடைவதும் அனுமானிக்க கூடியதாகவே உள்ளது.

இவ்வாறு பெண்களை மன ரீதியாக தாக்கமடைய செய்யும் அந்த கேள்விகள் இவைதான் 

  • நீ ஒரு பெண்! பெண்களால் எப்படி முடியும்.?

பெண்கள் உடல் வலிமையை பொறுத்த வகையில் ஆண்களை விட குறைத்தே மதிப்பிடப்படுகின்றனர். இதனால் ஒரு சில கடினமான வேலைகள் செய்யும்போது அவர்கள் இலகுவில் சோர்வடைந்து விடுகின்றனர், இதனை அடிப்படையாக கொண்டு ஒரு சிலர் பெண்களை குறைத்து மதிப்பிடவும் செய்கின்றனர். எதற்கெடுத்தாலும் நீ ஒரு பெண் உன்னால் இது முடியாது என்று கூறி அவர்களை குறைமதிப்பதன் மூலம் மட்டம் தட்டுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

பெண்கள் முயற்சிப்பதை தடுக்கும் வகையிலேயே இவ்வகை குறைபிதற்றல்கள் அவர்களுக்கு சாட்டப்படுகிறது . இவற்றினால் அவர்கள் மனசோர்வுக்கு உள்ளாவதை அறியக்கூடியதாக உள்ளது.

சமைக்க தெரியுமா?

பெண்கள் என்றாலே கண்டிப்பாக சமைக்க தெரிந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்பது எழுதிவைக்கப்படாத விதி ஆகிப்போனது. அதிலும் குறிப்பாக கீழைத்தேய நாடுகளில் பெண்களின் அடிப்படை வேலை என்னவென்றால் சமைப்பது, பிள்ளைகளை பராமரிப்பது, வீட்டு வேலைகளை செய்வது என்ற குறுகிய வட்டத்தினை கொண்டிருப்பார்கள். இந்த கேள்வியை அனைவரும் பொதுவாக கேட்பது பெண்களை மென்மேலும் எரிச்சலடைய செய்வதாக உள்ளது. 

பெண்களை மதிப்பீடு செய்யும் தகுதிகளில் ஒன்றாக மாறியது இந்த சமையல் மற்றும் உணவு தயாரிக்கும் செயற்பாடு என்பது பண்டை தொட்டு வழி வழியே வந்த செயலாகும். சமையல் எனும் அழகியல் கலை பெண்கள் கண்டிப்பாக அறிந்தேதான் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமானதா?

  • ஆண்களுக்கு பிடிக்குமா?

இது நகைச்சுவையானது என்றாலும் பெண்களை மேலும் எரிச்சலூட்டும் கேள்வியாகும். பெண்கள் பொதுவாக ஆண்களை கவர்வதற்காக சில செயல்களை செய்வார்கள் என்பது உளவியல் உண்மை. எதிர்பாலினத்தை கவரும் மனப்பாங்கு இயற்கையாகவே பெண்களுக்கு உள்ளது. அவ்வாறு பெண்கள் மேற்கொள்ளும் சில விடயங்கள் ஆண்களை கவருமா? என்ற அடிப்படை கேள்வியுடனேயே பலவகைகளில் முன்னெடுக்கப்படுவது வேடிக்கையானது.

பிறரை கவர்ந்திட வேண்டும் என்பது பொதுவாக எல்லோருக்கும் உள்ள அடிப்படையான விருப்பாகும் இதில் ஆண் பெண் என்ற வரையறை இல்லை. ஆயினும் பெண்களின் சில முயற்சிகளின் அடித்தளத்தில் அது ஆண்களை கவருமா? என்ற கேள்வியுடன் முன் கொண்டுசெல்லப்படுத்தல் வியப்பான சோர்வுநிலை .

  • எப்போது திருமணம்?.

பதின்ம வயதை அடைந்துவிட்ட ஆண் பெண் இருபாலாருக்குமான எரிச்சலூட்டும் கேள்வி இதுவேயாகும். திருமணம் என்பது ஒரு வயதுநிலைக்கு பின் கட்டாயமாக்கப்படல் வேண்டும் என்ற நிலைப்பாட்டினை இந்த சமூகம் கொண்டிருப்பது அறிந்ததே. தமது சுய சிந்தனை, முயற்சிகளுடன் தொழில், வாழ்க்கை என்பனவற்றில் பெண்கள் என்னதான் முன்னேற்றகரமாக இருப்பினும் நீங்கள் இன்னும் திருமணம் செய்யவில்லையா? என்ற கேள்வி மனவியல் ரீதியில் பெண்களை மயக்கமடைய செய்யும்.

திருமணப்பந்தத்தில் கண்டிப்பாக பெண்கள் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதை இந்த சமூகம் எழுதப்படாத விதியாக மாற்றி வைத்துள்ளது. குடும்ப சூழல், தனிப்பட்ட விருப்பு காரணிகளுக்காக ஒரு பெண் வயது எல்லையை கடந்து திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் அது அவளை தாக்கும் பேரிடியாக மாறியிருப்பதை காணலாம்.

இவ்வாறு வயதை கடந்துவிட்டாய், சீக்கிரம் திருமணம் செய்துகொள் எனும்போது பெண்களை மட்டம் தட்டுவதாக உள்ளது. இந்த சமூகம் முதிர்கன்னிகளை வரவேற்பதில்லை என்ற துரதிஷ்ட நிலையில் ஊறிப்போனதை இந்த கேள்வி பறைசாற்றுகின்றது.

  • உனக்கு மாதவிடாயா?.

பெண்கள் ஏதேனும் சோர்வாகவோ, அல்லது சாதாரண நிலையில் இருந்து மற்றம் கொண்ட குணவியல்புகளை வெளிக்காட்டினால் உடனே அனைவரும் முன்வைக்கும் கேள்வி உனக்கு மாதவிடாய் காலமா? என்பது. உண்மையில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் உடல் சோர்வுடனும், பல்வேறு அசௌகரியங்களுடனும் காணப்படுவது இயல்புதான். ஆயினும் அவர்களின் சோர்வுநிலைக்கு மாதவிடாய் மட்டுமே காரணமில்லை. அவர்களின் உடலியல் விளைவினை காரணமாக காட்டி பெண்களை மட்டமாக கணிப்பது விரும்பத்தகாத செயல். 

ஆண்கள் வலிமை மிகுந்தவர்கள் தான், எனினும் மனவலிமையை பொறுத்தவகையில் பெண்கள் ஆண்களைவிட வலிமை மிக்கவர்களாகவே கருதப்படுகின்றனர். இவ்வாறு உண்மை வலிமை கொண்ட பெண்களை குறைத்து மதிப்பிடாமை விட்டாலும் போதுமானது . இதுவே அவர்களை மதிப்பதற்கு சமமாகும். 

Article By TamilFeed Media, Canada
1757 Visits

Share this article with your friends.

More Suggestions | Lifestyle